Thursday, August 19, 2010

பெரிய மருது வேலு நாச்சியார் உறவு நிலை

அன்பார்ந்த இரா.முருகன் சிவகங்கை வரலாறுச்சற்றே சறுக்கலான வரலாறு கும்பெனி ஆவணங்கள் பின்நாள் எழுந்த வாரிசு உரிமைக் கோரிக்கை கோர்ட் வரை சென்று கோர்ட் அளித்த தீர்ப்புக்கள் இவற்றைச் சுற்றிச் சுழலும் ஒரு வரலாறு செவி வழிச் செய்திகள் ஏராளம் அச்செய்திகள் புனைவுகளாகக் கூட இருக்கலாம் செவிவழிச் செய்தி சொல்பவர் அதைக் கேட்டு நம்புவோர் இவர்களின் மனப்பக்குவங்களைப் பொறுத்தது அச்செய்திகள் அமைவதால் மட்டுமே வரலாற்றில் திடமான இடத்தைப் பிடிக்க இயலாது அத்தகையகச் செவி வழிச் செய்திதான் பெரிய மருது ராணி வேலு நாச்சியாரின் உறவு நிலை. பிரதானியான பெரிய மருது நாச்சியாரின் படுக்கை அறைவரை வர அநுமதிக்கப்படுகிறார் எனும் செய்தி விஷமத்தனமான வேண்டுமென்றே ஏதோ ஓர் அரசியல் காரணத்திற்காக கிளப்பிவிடப்பட்ட வதந்தியென்றே தோன்றுகிறது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்களான கும்பெனியார் ஏன் இதனைக் கிளப்பிவிடுவதன் மூலம் இரு ஜாதிகளிடையே சிண்டு மூட்டி மருதிருவரையும் அவர் சார்ந்த ஜாதியையும் தனிமைப்படுத்தித் தங்கள் ஆதிக்கத்தை சிவகங்கையில் நிலை நாட்டியிருக்கமுடியாது? பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த கும்பினியார் முந்தானை விரித்தாளும் போக்கிற்கு வித்திட்டிருக்கலாமே

Wednesday, August 18, 2010

வணக்கம் முருகன் தமிழில் சிறந்த சிறு கதை எழுத்தாளர் இம்மண்ணின் மைந்தர் என்வே அக்கறை காட்டுகிறீர்கள் நன்றி. தாண்டவராயர் 1773ல் மண்ணைவிட்டு மறைகிறார் பின்னரே மருதிருவர் பிரதானிகளாக ஆற்காட்டு நவாபாலும் கும்பெனியாலும் அங்கீகரிக்கப்படுகின்றனர் தாண்டவராயர் காலத்தில் மருது சகோதரர்கள் எவ்வாறு எந்த ஹோதாவில் சிவகங்கையில் செயல்பட்டனர் என்பதற்கு ஆதாரம் கொடுக்க ஆவணங்கள் இல்லை. யூசுப் கான் சிவகங்கைக் கோட்டையை முற்றுகையிட்டார் பின் ஒரு நாளில் கும்பெனியாரால் தூக்கு மேடையேறினார் அவரைக் காட்டிக் கொடுத்தவர்களுள் தாண்டவராய பிள்ளையும் ஒருவர் என்ற செய்தி வியப்பளிக்கவல்லது. பெரிய மருது வேலு நாச்சியார் மண உறவு செவி வழிச் செய்திகள் ஏளாரம். அவற்றைக் கொச்சைப்படுத்தி வரலாறாக்காமல் புதினங்கள் புனையலாம் கோ வி மணி சேரன் போன்று செளமிய ஆண்டு தைத்திங்கள் 13ம் நாள் உடன்படிக்கை மூலம் ராம்நாடு சீமையிலிருந்து பிரிந்து சின்ன மறவர் சீமையை ஆள முழுத்தகுதி பெற்ற நாலுகோட்டை வம்சம் சக்கந்தி வேங்கம் பெரிய உடையணத்தேவர் கும்பெனியால் நாடு கடத்தப்பட்டதோடு முடிய அவர்களுக்குத் தாயாதிக்காரர்களான படமாத்தூர் கெளரி வல்லவர் தன் அண்ணன் மக்களுடன் கும்பெனியாரால் அமைக்கப்பட்ட கீழ் மேல் கோர்ட்டுக்களில் தாவாப் பண்ணிக்கொண்டு 1829ல் காலமானார். அதற்குப்பிறகு எழுந்த வரலாறு வாரிசுரிமைச் சண்டைகளின் வரலாறு வக்கீல்களுக்கு மட்டுமே புரியம் வாதப்ரிதிவாதங்கள். அவற்றின் ஒட்டு மொத்த வரலாறு k.Annaasamy அய்யர் எழுதிய Sivanganga Zemindary Its Origin and Litigation 1730 - 1899ல் படித்துப் பார்க்கலாம், பக்கத்தில் ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொண்டு

Sunday, August 8, 2010

சிவகங்கை பிரதானி தாண்டவராய பிள்ளை

தாண்டவராய பிள்ளை
.


தாண்டவராய பிள்ளை
தாண்டவராய பிள்ளை (கிபி 1700 - 1773) சிவகங்கைச் சீமையின்பிரதானியாகவும், தளவாயாகவும் பணியாற்றியவர்.கட்டபொம்மனுக்கு சுப்பிரமணிய பிள்ளை, முத்துராமலிங்க சேதுபதிக்கு தாமோதரன் பிள்ளை பிரதானிகளாக அமைந்தது போல, சிவகங்கைச் சீமையை ஆண்ட சசிவர்ணத் தேவர் (1730–1750), முத்துவடுகநாதத் தேவர் (1750-1772), ராணி வேலு நாச்சியார்(1772-73) ஆகியோருக்கு அமைந்தவர் தாண்டவராய பிள்ளை.

தோற்றம்
சிவகங்கை இராச்சியத்தில் திருக்கோட்டியூருக்கு அருகில் அரளிக்கோட்டை(முல்லையூர்) எனும் கிராமத்தில் காத்தவராய பிள்ளை என்பாருக்கு மகனாக இவர்1700ம் ஆண்டில் பிறந்தார். அவர் தமது சமுதாயத்திற்கென்றே உரிய பண்பான கல்வி ஆற்றல் விவேகம் ஒருங்கே அமைந்தவராய் உருவானார்.
பிரதானிப் பணி
மதுரை மன்னருக்கான போட்டியில் பங்காரு திருமலை நாயக்கரை எதிர்த்த ஆற்காட்டு நவாபு சந்தா சாகிபு, பங்காரு திருமலையையும் அவர்தம் மகன்விஜயகுமார் நாயக்கரையும் அம்மைய நாயக்கனூர் போரில் தோற்கடித்த பின்னர் நாயக்கர்களுக்கு சசிவர்ணத்தேவரின் வீரமும் தாண்டவராய பிள்ளையின் விவேகமும் பெரு துணையாக நின்று சிவகங்கை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சிக் கோட்டையில் இரு நாயக்கர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உதவிற்று[1].
மதுரைமீது படையெடுப்பு
சசிவர்ணர் 1750 இல் காலமானார். அவரது மகன் முத்து வடுக நாதர் மன்னரானார்.1752 இல் ராமனாதபுரச் சேதுபதியும் முத்து வடுக நாதரும் விஜய குமார் திருமலை நாயக்கரை மதுரை மன்னாராக்கினர். மைசூர் தளபதி மாயனா விஜயகுமாரை மன்னர் பதவியிலிருந்து விரட்டியடித்தார். ராம நாதபுரம் தளபதி வெள்ளையன் சேர்வைகாரரும் சிவகங்கை பிரதானி தாண்டவராய பிள்ளையும் மதுரை மீது படையெடுத்து மாயனாவைத் தோற்கடித்தனர்[2].
தாமரைப் பட்டயம் வழங்கல்
சிவகங்கை சமஸ்தானத்தை உருவாக்கி மன்னர் சசிவர்ணத் தேவரின் மனதில் நீங்காத நிறைவான இடத்தைப் பெற்றப் பிள்ளையைப் பாராட்டி மன்னரது மகன் முத்து வடுக நாதர் அவருக்கு ஒரு தாமரைப் பட்டயம் வழங்கி பிள்ளையைப் பெருமைப் படுத்தியுள்ளார்.

காளையார் கோவில் போர்
1772ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் நாள் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைத் தளபதி பான்ஜோர் தலைமையில் வந்த படைகளும் ஆற்காட்டு நவாபின் படைகளும் இணைந்து தொடுத்த காளையார் கோவில் போரில் பிள்ளை விடுத்த எச்சரிக்கையையும் மீறி மன்னர் முத்து வடுக நாதர் பீரங்கி குண்டடிபட்டு வீர மரணமடைந்தார்[3].
ராணியும் பிள்ளையும்
முத்து வடுக நாதர் தம் மனைவி ராணி வேலு நாச்சியார், இளவரசி வெள்ளச்சி நாச்சியார் தாண்டவராய பிள்ளை மற்றும் மருது இருவர் உதவியுடன் திண்டுக்கல்அருகே உள்ள விருப்பாச்சிக்கு விரைந்தனர். சிவகங்கையில் நவாபின் ஆட்சி ஏற்பட்டது. ராணி வேலு நாச்சியாரை மீண்டும் சிவகங்கை அரியணையில் ஏற்ற பிள்ளை திண்டுக்கலிருந்த ஹைதர் அலியின் உதவியை நாடினார். படை உதவி கேட்ட ஆறு மாதங்களுக்குள் 1773ல் பிள்ளை அவர்கள் காலமானார்[4].
பிள்ளையின் கோவில் திருப்பணிகள்
சைவப் பெருங்குடியில் உதித்த இயற்கை இறை நேசர் தாண்டவராய பிள்ளைகுன்றக்குடி முருகன் கோவிலைப் புதுப்பித்தார். அங்கு வையாபுரி தடாகம் நந்தவனம் வேத பாடசாலை அமைத்தார். திருப்புத்தூரில் வைரவ நாத சுவாமி கோயிலுக்கும் திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவிலுக்கும் ஏராளமான திருப்பணிகளைச் செய்தார். பிள்ளையின் சிறப்புக்கள் அருங்குணங்கள் அருட்கொடைகள் தெய்வத் திருப்பணிகள் ஆகியவற்றை மிதுலைப் பட்டி எனும் ஊரில் வாழ்ந்த குழந்தைக் கவிராயர் எனும் புலவர் இயற்றிய மான் விடு தூது எனும் நூல் சிறப்பாக விவரிக்கிறது. இந்நூலை தமிழ்த் தாத்தா ஊ வே சா அவர்கள் பதிப்பித்து அதற்குச் சிறப்புரை எழுதியுள்ளார்.
குறிப்புகள்
1. ↑ The Indian Antiquary vol YL VI- Bombay-page 239
2. ↑ The History of Madurai by Dr.K.Rajayyan
3. ↑ The History of Madurai by Dr.K.Rajayyan
4. ↑ The History of Madurai by Dr.K.Rajayyan

மருது பாண்டியர் கூட்டமைப்பு

.மருதுபாண்டியர் கூட்டமைப்பு என்பது சின்ன மருது தலைமையில் ஆங்கிலேயருக்குஎதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய போராளிகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.
வரலாறு
வணிக நோக்கோடு தென்னிந்தியாவில் காலூன்றிய பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியார் தென்னிந்தியாவில் பாளயக்காரர்களுக்கு இடையே பிரித்தாளும் சூழ்ச்சியினைக் கையாண்டனர்.
முதல் பலிக்காடாவாக ஆனவர் ஆற்காடு நவாப். நவாபுக்கு இதுகாறும் கப்பம் செலுத்திவந்த தமிழக பாளையப்பட்டுக்கள் ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சுரண்டலுக்கு இரையாகின. பிரித்தானிய எதிர்ப்பு, ஓர் இயக்கமாக இல்லாவிடிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேர் விட்டுக்கொண்டிருந்த நேரம்.
1799 ஆம் ஆண்டு பிரித்தானியர் எதிர்ப்புப் புரட்சியில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது.திருநெல்வேலியும் மைசூரும் அன்னிய ஆதிக்கத்திற்கு இரையாயின. ஆங்கிலேயர்கள் பெற்ற இவ்வெற்றி தேசியப் போராட்டத்திற்கு மரண அடியாக அமையவில்லை. பிரித்தானிய எதிர்ப்பு அமைப்புகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே அமைந்தது. தென்னிந்தியாவின் வட பகுதியில் திப்பு சுல்த்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர மரணம் எய்திய செய்தியும், கட்டபொம்மனுடைய வீர மரணமும் ஒருங்கிணைந்த தேசிய உணர்ச்சியைத் தென்னிந்தியா முழுமையும் பரவக் காரணமாக அமைந்தன.
கூட்டமைப்பு
பாஞ்சாலங்குறிச்சியின் அழிவுக்குப்பின்னால் பிரித்தானிய எதிர்ப்புப் போராளிகள் ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனைகளுக்கு அஞ்சி சிவகங்கைச்சீமையின்அடர்ந்தக் காட்டுப் பகுதியான காளையார்கோவில் காடுகளில் தஞ்சமடைந்ததுடன் அங்கு ஏற்கனவே இருந்த புரட்சிக் கூட்டமைப்போடு இணைந்து கொண்டனர். மைசூரின் வீழ்ச்சியை அடுத்து மேற்குப் பகுதியிலிருந்த போராளிகளும் இப்பாதுகாப்பான காளையார் கோவில் காட்டுப் பகுதிக்கே வந்து தஞ்சமடைந்தனர்.
காளையார்கோவில் காட்டுப் பகுதியானது மானாமதுரை, சாக்கோட்டை, சிங்கம்புணரிஆகிய இடங்கள் வரையில் சுமார் 50 மைல் சுற்றளவுக்குப் பரவியிருந்தது. அடர்ந்த காட்டுப் பகுதி இது. தற்போது பேசப்படும் கெரில்லாப் போர் தந்திரங்களுக்குத் தகுதியான வனப்பகுதி. இதனிடையே கிராமங்களோ, விவசாய நிலங்களோ இல்லை. இங்குள்ள மரங்கள் எல்லாம் வலுவானவை, தரையோடு படர்ந்துள்ள மரங்களும் அதிகம். மருதிருவரின் படைவீரர்களால் காக்கப்பட்டு மாற்றார் அணுகா வண்ணம் அமைந்திட்ட இப்பகுதி மைசூர் திருநெல்வேலி வீழ்ச்சிக்குப் பின்னால் போராளிக் குழுக்களின் நடவடிக்கைக்கு மையமாக அமைந்தது.
பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிரான சக்திகள் ஓர் இயற்கை இயக்கமாக உருமாற்றம் அடையக் காரண கர்த்தா சின்ன மருதுபாண்டியர் ஆவார். மருதுபாண்டியரின் அருகாமை, போராளிக் குழுக்களுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் இயக்க எதிர்ப்பானது உன்னதமான உயிர்த் தியாகங்களுக்கு தயாராக இருந்த வீரர் படையைப் பெற்றிருக்கமுடியாது.
சின்ன மருதுபாண்டியர் ஆங்க்கிலேயரின் பலவீனத்தை நன்கு அறிந்த ராஜ தந்திரியாவார். ஒரு பாளையத்திற்குமேல் இரண்டு பாளையங்கள் சரியானபடி முழுமூச்சாக எதிர்த்தாற்கூட ஆங்கிலேயர் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். இதை உணர்ந்துதான் சின்ன மருது கூட்டமைப்பைக் கூட்டத் தொடங்கினார். ஆனால் ஆங்கிலேயர் தம் நோக்கம் நிறைவேறப் பாளையங்களை ஒன்று சேரவிடாமல் அவர்களுக்குள் சிண்டு முடிந்தனர்.
வெல்லற்கரிய அவ்வீரர் அடுத்துச் செய்தது, போராளிக் குழுமங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளச் செய்த்தாகும். கிராமங்களின் நாட்டாமைகளுக்கும் பாளையங்களின் தலைவர்களுக்கும் தூதுவர்களை அனுப்பி புரட்சி இயக்கச் செய்தியைக் கொண்டு செல்லவைத்தார். அக்கூட்டமைப்புக்கள் மிகத்திறமையான தலைவர்களின் கீழ் திரைமறைவில் இரகசியமாக இயங்கத்தொடங்கின.
தென்னகத்தின் விடுதலைப் போராளிகளின் கழகங்கள் அல்லது கூட்டமைப்புக்கள் எவ்வாறு ஒரு கட்டுக்கோப்புக்குள், ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிறந்த தலைமையின் கீழ் இயங்கின என்பதைக் காட்டும்.
 தஞ்சைப்பகுதி:- ஞானமுத்து
 இராமநாதபுரம் பகுதி :- மயிலப்பன், சிங்கம் செட்டி,முத்துகருப்பர்
 மதுரை மற்றும் சிவகங்கைப் பகுதி :- மருதிருவர்
 திண்டுக்கல் மற்றும் திருச்சிப் பகுதி :- விருப்பாட்சி கோபால நாயக்கர்
 கோவை மற்றும் சேலம் பகுதி :- கானிஜா கான்
 வட கேரளம் ( மலபார் ):- கேரள வர்மன் ( பழசி ராஜா )
 மேற்கு மைசூர் :- கிருஷ்ணப்ப நாயக்கர்
 வட கன்னடம் மற்றும் அதன் வடபாலுள்ள பகுதிகள் :- தூண்டாஜி வாக்
இவற்றில் இராமநாதப் போராளிகள், தஞ்சைப் போராளிகள், சிவகிரிப் பாளையக்காரரின் மைந்தன் மாப்பிள்ளை வன்னியன் தலைமையிலான மேற்கு நெல்லைப் போராளிகளின் கூட்டுக் குழுக்கள் சின்ன மருதுவின் தலைமையை ஏற்றன. கிழக்கு நெல்லைப் போராளிகளின் கழகத் தலைவரான கட்டபொம்மனுக்கு உந்து சக்தியாக விளங்கியவரே சின்ன மருதுதான்.
 South Indian Rebellion by Dr.K.Rajayyan (1971), பக்கங்கள்: 66, 67, 70, 79, 82, 83, 86, 89, 94, 138, 141, 266, 269, 271
 A History of Freedom Struggle in India by Dr.K.Rajayyan, பக். 45
.

மருது பாண்டியர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி

மருதிருவர் பெற்ற சாபம்
சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர் சிவகங்கை அருகே உள்ள ஒர் சிற்றூர் காளையார்கோவில். பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம் நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர். சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்ப்டும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ சமாதியில் இருந்து வந்தார். அவர் பெயர் நாராயண யோகீஸ்வர் என்பர். 1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர். நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும். பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.


மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.
மருதிருவரின் ஆணைப்படி கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர். மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார். அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார். அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர். அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர். தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார். அதன்ப்டி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.
சித்தர் நாராயண யோகீஸ்வரரின் ஜீவ சமாதி இன்றும் சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்தானத்தினரால் காளையார்கோவிலில் பேணப்பட்டு வருகிறது

Saturday, August 7, 2010

மருதுபாண்டியர்களுக்குப் பின் நாட்களில்

அய்யன்மீர் வணக்கம் 18ம் நூற்றாண்டில் வெள்ளையனை எதிர்த்து முதல் குரல் எழுப்பி உள்நாட்டுச் சதிகாரர்களின் சதிச்செயல்களால் தூக்கு மேடையைத் தழுவினரே சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த மருதிருவர் அவர்களது வரலாறு நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள்..... 24-10-1801ல் அவ்விருவரும் தூக்கிலப்பட்ட பின்னர் சிவகங்கைச் சீமையில் நடந்த விவரங்களை அறிவீரா 2010 ஆகஸ்ட் காலச்சுவடு சிற்றிலக்கிய இதழில் மருதிருவர் தொடர்பான கட்டுரை ஒன்றைப் படித்தேன். நீங்களும் படியுங்களேன் காலச்சுவடு இதழின் URL www.kalachuvadu.com