Sunday, February 13, 2011

தேசப்பிதாவிற்கு தெருப்பாடகனின் அஞ்சலி- கவிஞர் மு.மேத்தா

(மு.மேத்தாவின் ‘தேசப்பிதாவிற்கு தெருப்பாடகனின் அஞ்சலி’ என்ற கவிதையிலிருந்து சில பகுதிகள்)

உன்னுடைய படங்கள்
ஊர்வலம் போகின்றன
நீயேன்
தலைகுனிந்தபடி
நிற்கிறாய்?

தேசப் படத்திலுள்ள
கோடுகள்
விடுதலைக்குப் போராடிய
வீரத் தியாகிகளின்
விலா எலும்புக் கூடுகள்!

அமுதசுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம் !

இந்த மாற்றத்தை
நிகழ்த்திய
மந்திரவாதிகள் யார்?

நிழலுக்குள் மறைந்திருக்கும்
நிழலை
யார் அம்பலப்படுத்துவது?

மயிலுக்கு போர்வை தந்தவனின்
மரபில் வந்தவர்கள்
எங்கள் மேனியில் கிடக்கும்
கந்தல் சட்டைகளையும்
கழற்றிக் கொண்டு போகிறார்கள்

ஆடுகள்
உனக்காக வளர்த்தோம்
நாளடைவில் நாங்களே
மந்தை ஆடுகளாய்
மாறிப் போனோம் !

எங்கள்
வயிற்றைப் புறக்கணித்துவிட்டு
காம்புகளை நேசிக்கிறார்கள் !

எங்களுக்குத்
தீவனம் கிடைக்காவிட்டாலும்
மேய்ப்பவர்களுக்கு மட்டும்
எப்படியோ
இனாம் கிடைத்து விடுகிறது !

நீ கண்டுபிடித்த
சுதேசி ஆயுதமாம்
கைராட்டையை சுற்றிய சிலர்
தங்கநூல் நூற்கிறார்கள் !

எங்களுக்கோ
வெள்ளியும் தங்கமும்
விழாக்களின் பெயர்களில்தான்
வருகின்றன

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்
இந்த நாட்டுமக்கள்
உன்னை
அப்படியே பின்பற்றுகிறார்கள்
அரைகுறையாகத்தான்
உடுத்துகிறார்கள்.

No comments: