Thursday, February 24, 2011

கனியிருப்ப

இது என் சொந்தப் பங்களிப்பல்ல். சவுக்கு இணையதளத்திலிருந்து இரவல் வாங்கப்பட்டுப் பகிர்தலாகப் படைக்கப்படுகிறது.. தென்னகத்து பூலான் தேவி….
சனிக்கிழமை, 19 பிப்ரவரி 2011 02:07


பூலான் தேவியைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரசித்திப் பெற்ற கொள்ளைக் காரர். அவரைப் பற்றியதல்ல இந்தக் கட்டுரை.


இந்தக் கட்டுரை தென்னகத்து பூலான் தேவியைப் பற்றியது.

அந்தப் பூலான் தேவி, நெருக்கடியால் கொள்ளைக்காரியானவர். இந்தப் பூலான் தேவி, கொள்ளையடித்ததால் நெருக்கடிக்கு உள்ளானவர்

அந்தப் பூலான் தேவி, சமுதாயத்தால் வஞ்சிக்கப் பட்டவர்.

இந்தப் பூலான் தேவி சமுதாயத்தையே வஞ்சித்தவர்.

அந்தப் பூலான் தேவி படிப்பறிவில்லாத பாமரர்

இந்தப் பூலான் தேவி படித்துத் தேறிய கவிஞர்

அந்தப் பூலான் தேவி சொந்தக் குடும்பத்தாலேயே வெறுத்து ஒதுக்கப் பட்டவர்

இந்தப் பூலான் தேவி தன் குடும்பத்தால் ஊரை அடித்து உலையில் போட்டவர்.

இந்நேரம் தென்னகத்து பூலான் தேவி யாரென்று கண்டு பிடித்திருப்பீர்களே… ? சவுக்கு வாசகர்கள் அல்லவா… அறிவாளிகளாயிற்றே நீங்கள்.
ஆம் இந்த பூலான் தேவி வேறு யாருமல்ல. கவிஞர் என்ற அடைமொழியோடு வலம் வரும் கனிமொழி தான் அது.

சவுக்குக்கு கனிமொழியை பிடிக்கும். என்ன காரணம் தெரியுமா ? கருணாநிதியின் கயமையும், வஞ்சகமும், மற்ற கெட்ட திறமைகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்டவர். இவரைப் போல கருணாநிதியின் மற்ற வாரிசுகள் ஒருவரும் இத்தனை திறமை கொண்டவர்கள் அல்ல. அது அழகிரியாக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி. ஒருவருமே இவர் அருகே நிற்க முடியாது.






கனிமொழியின் பெரிய திறமை என்னவென்றால், தன்னை ஒரு மென்மையான, அப்பாவி கவிஞராக வளர்த்துக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள தமிழாசிரியர்கள் பெரும்பாலும், திமுக ஆதரவாளர்களாகவே இருப்பர். தன்னுடைய முதல் கவிதை தொகுதியான கருவறை வாசனைகளை வெளியிட்ட போது, பெரும்பாலான தமிழறிஞர்கள் கனிமொழியை கவிஞராக அங்கீகரித்தனர்.
கருணாநிதி என்ற தன் தந்தையின் நிழலையும் மீறி, கனிமொழி நல்ல கவிஞர் என்பதை பெரும்பாலான கவிஞர்கள் ஒப்புக் கொண்டனர். அதெல்லாம், பெரிய அரங்கேற்றத்திற்கான ஒப்பனைகள் என்பது பின்னர் தான் தெரிய வந்தது.
கனிமொழியின் பிரபலமான கவிதையான

பள்ளிக்குச் சென்றேன்
தலைசிவினேன், சில
நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டைபோட்டுக் கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று...



என்பதையே சற்று பொறுமையாக கவனித்துப் பாருங்களேன். அவரது முறை வந்த போது என்ன செய்திருக்கிறார் என்று.
சவுக்குக்கு கனிமொழியோடு பரிச்சயம் 2002ம் ஆண்டு. குஜராத்தில் நடந்த கலவரங்களைப் பார்த்து, மனசாட்சி உள்ள அத்தனை பேரும் துடி துடித்து நின்ற போது, சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன், கோபாலபுரத்தின் நிலைய வித்வான் துரை.ரவிக்குமார் மற்றும் கனிமொழி ஆகியோர் பேசினர். கோபாலன் தனக்கே உரிய இயல்பான பாணியில் உணர்ச்சி வயப்பட்டு, ஊடகங்கள் இந்தக் கலவரத்தை கவர் செய்த விதத்தைப் பற்றி கோபப் பட்டார்.
அப்போதுதான் கனிமொழியின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. ஒரு பெரிய பேச்சாளருக்கான சரளமான மொழி நடை இல்லாவிட்டாலும், ஒரு இயல்புத் தன்மை இருந்தது. அப்போதுதான் கனிமொழி மீது மரியாதை ஏற்பட்டது.
சவுக்கைப் போலவே, பல்வேறு நோக்கர்களும், கனிமொழியை அப்படித் தான் கருதியிருந்தார்கள்.
ஒரு மூத்த பத்திரிக்கையாளர், நேரடியாக கனிமொழியிடமே, ‘நீங்கள் சேற்றில் மலர்ந்த செந்தாமரை’ என்றார். அப்படி ஒரு தாக்கத்தை கனிமொழி ஏற்படுத்தி இருந்தார்.


2004 யுபிஏ அரசாங்கத்தில் கனிமொழிக்கு மந்திரி பதவி கொடுக்கப் படவில்லை. முதல் யுபிஏ முடியும் முன்பாகவாவது, கனிமொழிக்கு மந்திரி பதவி கொடுக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் இறுதி வரை கனிமொழிக்கு மந்திரி பதவி கொடுக்கப் படாதது, பலருக்கு உண்மையில் கனி மொழி மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
தன்னை ஒரு நடுநிலை ஜனநாயகவாதியாக அடையாளம் காட்டிக் கொள்வதற்காக, மற்றொரு அரசியல் வாரிசான, கார்த்திக் சிதம்பரத்தோடு சேர்ந்து, “கருத்து” என்ற இணையதளத்தை தொடங்கி அது கருத்துச் சுதந்திரத்திற்கான களம் என்று அறிவித்தார்.
ஆனால், முதல் யுபிஏ முடியும் முன்னரே, கனிமொழி தன்னை அரசியல் அரங்கில் தனது சகோதரர்களுக்கு இணையாக வளர்த்துக் கொள்வதில் தனது மறுபக்கத்தை காண்பிக்கத் தொடங்கினார். தனக்கென ஆதரவாளர் கூட்டத்தை வளர்த்துக் கொள்வது, தனது சாதியைச் சேர்ந்தவர்களுக்கு காரியங்களை முடித்துக் கொடுப்பது, என்பதில் தொடங்கி, போலிப் பாதிரியோடு, சேர்ந்து சென்னை சங்கமம் என்ற நிகழ்சி நடத்துவதில் முடிந்தது. சென்னை சங்கமம் கிராமிய கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக நடந்த நிகழ்வு என்றாலும், அதில் கார்ப்பரேட்டுகள் வகித்த பங்கும், தமிழக அரசின் போக்குவரத்து கழகங்கள் உட்பட, அரசு அதிகாரிகளை இந்த நிகழ்ச்சிக்காக பயன்படுத்திய விதமும், அனைவரையும் முகம் சுளிக்க வைத்து, கனிமொழியின் உண்மையான பூலான் தேவி முகத்தை ஓரளவுக்கு வெளிக் காட்டியது.
ஆனால் இரண்டாவது முறை யுபிஏ அரசாங்கம் பதவி ஏற்ற போதும், கனிமொழிக்கு மந்திரி பதவி இல்லை என்ற விஷயம் கனிமொழி மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. ஆனால், மந்திரி பதவி கிடைக்காததற்குப் பதிலாக கனிமொழி என்னவெல்லாம் செய்தார் என்பதை உலகம் அறிந்த போது, கனிமொழியின் மீது இருந்த அத்தனை பரிதாபமும் வெறுப்பாக மாறியது. குறிப்பாக நீரா ராடியாவுடன் கனிமொழி நடத்திய அத்தனை உரையாடல்களும், இதயத்தை உறையச் செய்யக் கூடியவை. நடுநிலையாளர்களையும், ஜனநாயகவாதிகளையும் பதை பதைக்கச் செய்யக் கூடியவை.
சேற்றில் பூத்த செந்தாமரை என்று அன்று கனிமொழிக்கு பட்டம் கொடுத்த அந்த மூத்த பத்திரிக்கையாளர் நீரா ராடியா உரையாடல்களை கேட்டு, என்ன ஆகியிருப்பார் என்று நினைப்பதற்கே பாவமாக இருக்கிறது.
இதற்குப் பிறகு தான் கனிமொழியின் பூலான் தேவி முகம் வெளி உலகக்கு தெரியத் தொடங்குகிறது.





ஆண்டிமுத்து ராசா, தொலைத் தொடர்பு மந்திரி ஆவதற்கு முன்பாக, இணை அமைச்சராக இருந்த போதே, அரசியல் ஏணியில் முதல் படியை அடைவதற்கு, குடும்பப் படியே சிறந்த வழி என்பதை உணர்ந்தார். இரண்டாவது குடும்பத்தின் படிகள் அல்லக்கைகளால் மிகுந்த நெருக்கடியாக இருந்ததால், மூன்றாவது குடும்பத்தின் படிகளே, முதல் படியை அடைவதற்கு ஏற்ற வழி என்று, சபரி மலை 18 படியைப் போல, மிகுந்த புனிதமாக அந்தப் படிகளை தொழுது, தனது அரசியல் வாழ்வை செழுமையாக்கிக் கொண்டார் ஆண்டிமுத்து ராசா. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையில் சம்பாதிக்க ராசா தேர்ந்தெடுத்தது, மூன்றாம் குடும்பத்தின் வழியை.
அரசியலிலும் சரி, அதிகார மையத்திலும் சரி, குடும்பத்தின் வழியாக புகுந்து தலைவரின் மனதில் இடம் பிடித்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். ராசாத்தி அம்மாள் மற்றும், கனிமொழியை பொறுத்தவரை, முதல் குடும்பத்திற்கு கிடைக்கும், மரியாதைகளும் சலுகைகளும் தங்களுக்கு கிடைப்பதில்ல என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. இந்த நேரத்தில், ஆண்டிமுத்து ராசா வழியில் ஒரு சரியான அடிமை சிக்கியதும், அகப்பட்டதை சுருட்டலாம் என்று முடிவெடுக்கின்றனர் தாயும் மகளும்.
2ஜி அலைக்கற்றை ஏலத்தில் கிடைத்த பல்லாயிரக்கணக்கான கோடிகளை, ராசா கருணாநிதியின் உத்தரவோடு பெரும் பங்கை கொடுத்தது சிஐடி காலனியில் உள்ள துணைவியின் இல்லத்தில். இதனால் ராசா மீது மிகுந்த நம்பிக்கை கொண்டனர் சிஐடி காலனி மகாராணிகள். இதன் வெளிப்பாடே, ராசாவுக்காக தொடர்ந்து இடை விடாமல் நீரா ராடியாவுடன் பேசியது. எப்படியாவது ராசாவை தொலைத் தொடர்புத் துறை மந்திரியாக

ஆக்க வேண்டும் என்று முயன்று அதில் வெற்றியும் பெற்றார்கள். இந்த முயற்சி எதற்கென்றால், 2ஜி அலைக்கற்றையிலேயே இத்தனை கோடிகள் என்றால், 3ஜி அலைக்கற்றையில் எத்தனை கோடிகள் கிடைக்கும் என்ற நப்பாசையே…!
கிடைத்த பல்லாயிரக்கணக்கான கோடிகளை என்ன செய்வது என்று தெரியாமல், தாறுமாறாக சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள். நேரடியாக தாய் பெயரிலோ, மகள் பெயரிலோ சொத்துக்களை வாங்கிக் குவித்தால் தெரிந்து விடும் என்பதற்காக, ஒவ்வொரு சொத்துக்கும், ‘சொன்ன படி தலையாட்டும்’ ஆடு ஒன்றை பிடிக்கிறார்கள்.
அந்த ஆட்டின் பெயர் தான் சண்முகநாதன். யார் இந்த சண்முகநாதன். இவர் மலேசியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் என்று தன்னை சொல்லிக்கொள்கிறார். இவர் ஷங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்துகிறார். ஆனால், விசாரித்துப் பார்த்ததில், இந்த நிறுவனங்கள் அத்தனையும் செயலிழந்து பல ஆண்டுகள் ஆகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சண்முகநாதன் பெயரில், இந்த சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர், தென்னகத்து பூலான் தேவி குடும்பத்தார்.
முதல் சொத்து… சென்னை அண்ணா சாலையில் உள்ள வோல்டாஸ் கட்டிடம். இந்த சொத்து டாக்டர் கே.சண்முகநாதன் என்பவர் பெயருக்கு 27 ஏப்ரல் 2009 அன்று விற்பனை செய்யப் பட்டதாக மாற்றம் செய்யப் படுகிறது.

இந்தச் சொத்துக்காக சண்முகநாதன் வழங்கியதாக சொல்லப்படும் தொகை, ஏழு கோடியே, 62 லட்சத்து 32 ஆயிரத்து எழுபத்தாறு ரூபாய்.

இந்த பரிவர்த்தனை பற்றிய விரிவான செய்திகளுக்கு, தொழில் அதிபர் ராசாத்தி அம்மாள் என்ற கட்டுரையை படியுங்கள்.
இப்போது வெளிச்சத்திற்கு சவுக்கு தனது வாசகர்களுக்காக பிரத்யேகமாக கொண்டு வந்திருக்கும் பரிவர்த்தனை, உதகமண்டலத்தில் உள்ள வின்ட்ஸ்ர் எஸ்டேட் என்ற 526 ஏக்கர் பரப்பளவுள்ள எஸ்டேட்டை வெறும் 2.47 கோடிக்கு வாங்குகிறார் இந்த டாக்டர் சண்முகநாதன். இந்த எஸ்டேட்டின் அசல் மதிப்பு 300 கோடிக்கும் குறையாமல் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த சண்முகநாதன், தென்னகத்து பூலான் தேவி சார்பில் மேலும் பல சொத்துக்களை வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சண்முகநாதனை உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட், கடந்த மாதம் 10 முறை சந்தித்ததும், அந்த சந்திப்புகள் ஹோட்டல் அறைகளிலும், சாலையில் செல்லும் போது கார்களிலும், டிஜிபி அலுவலகத்தின் பின்புறம் உள்ள சந்துகளிலும் நடைபெற்றிருப்பது, சண்முகநாதனை மேலும் மர்மமான மனிதராக்குகிறது. சிபிஐ அதிகாரிகள் இந்தத் தகவலையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது தவிரவும், தென்னகத்து பூலான் தேவி, சிறுசேரி மஹிந்திரா சிட்டியின் பின்புறம் உள்ள கொண்டமங்கலம் என்ற கிராமத்தில் 170 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் 230 ஏக்கர்கள் நிலம், பூனாவைச் சேர்ந்த என்.எஸ்.பி பேர்ள் சிட்டி என்ற நிறுவனமும், சாதிக் பாட்சாவின் க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து 14 மாடிகள் கொண்ட, மிகப் பெரிய சொகுசு அடுக்குமாடி வீடுகளை உட்ட உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள். தென்னகத்து பூலான் தேவி என்றால், வெறுமனே சொத்துக்களை வாங்கிக் குவித்தால் மட்டும் போதுமா என்ன ? தொழில் தொடங்க வேண்டாமா ?





அதற்காகத் தான், அலாஃப்ட் என்ற பெயரில், ஐந்து நட்சத்திர ஒட்டல்கள் கட்ட தென்னகத்து பூலான் தேவி திட்டமிட்டுள்ளார். இந்த ஓட்டல் திட்டத்திற்கு சிக்கிய ஆடு, ஆட்டோமேட்ரிக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் குமார் சீத்தாராமன் என்பவர். இவர் தான் பூலான் தேவியின் ஏஜென்டாக இருந்து செயல்படுகிறார்.
கலைஞர் டிவிக்கு டி.பி.ரியாலிட்டி நிறுவனம் 216 கோடி ரூபாய் வழங்கியது எப்படி வழங்கப் பட்டது என்பது நினைவிருக்கிறதா ? முதலில், டிபி.ரியாலிட்டி, பிறகு டைனமிக்ஸ் ரியாலிட்டி. பிறகு குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடெபிள்ஸ், கடைசியாக சினியுக் பிரைவேட் லிமிட்டெட்.
2000 கோடியை முதலீடு செய்ய பூலான் தேவி தேர்ந்தெடுத்த வழியும் இதுதான். அலாஃப்ட் செயின் ஆப் ஹோட்டல்ஸ் என்று இந்தியா முழுக்க ஓட்டல் கட்ட வேண்டுமென்று திட்டம். எடுத்தவுடன் இந்த நிறுவனம் அத்தனை ஹோட்டல்களையும் கட்டத் தொடங்கினால் சந்தேகம் வருமல்லவா ?
அதற்காக முதலில் மொரீஷியஸைச் சேர்ந்த சிப்பிஐ இந்தியா என்ற நிறுவனம் அர்பன்எட்ஜ் என்ற நிறுவனத்தோடும், ஆரோமேட்ரிக்ஸ் என்ற நிறுவனத்தோடு சேர்ந்தும் பல ஹோட்டல்களை கட்ட திட்டமிடுகிறது. இந்த ஆரோமேட்ரிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தான் குமார் சீத்தாராமன்.

இதையடுத்து ஆரோமேட்ரிக்ஸ் நிறுவனம், ஹோட்டல் கட்டும் பொறுப்பை அத்வைய்யா ஹாஸ்ப்பிட்டாலிட்டீஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கிறது. அதன் படி, முதலில் சோழிங்கநல்லூரில் 120 அறைகளைக் கொண்ட நான்கு நட்சத்திர ஹோட்டலும், பெங்களுருவில் ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டலும் கடந்த ஜுன் 2010ல் தொடங்கப் பட்டு விட்டன. அடுத்து கோயம்பத்தூரில் வேலைகள் தொடங்கப் பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கோவையைத் தொடர்ந்து அகமதாபாத், சண்டிகர், கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், நாக்பூர், விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத்தில் இதே போல ஹோட்டல்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த குமார் சீத்தாராமனை சிபிஐ பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இது தவிரவும், பூலான் தேவியின் சொத்துக்களைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. விபரங்கள் கிடைத்ததும், அது சவுக்கு வாசகர்களுக்குத் தானே… ?
நன்றி சவுக்கு 19-2-2011

http://savukku.net/index.php?option=com_content&view=article&id=433:2011-02-18-20-57-44&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

No comments: